Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச)
1993 ஏப்ரல் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ விரிவான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், 1993-ல் நடைபெற்ற சம்பவங்களை திரித்து, 2009-ஆம் ஆண்டு முரசொலியில் கலைஞர் கருணாநிதி எழுதிய கவிதை மூலம் தன் மீது பொய்யான சித்திரம் உருவாக்கப்பட்டதாகவும், தற்போது 2026-ஆம் ஆண்டில் அதே குற்றச்சாட்டுகள் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விளக்கத்தில், 1993 ஏப்ரல் 14-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்திற்கு முன், தன்னைப் புகழ்ந்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் கருணாநிதி அதிருப்தி அடைந்ததாக தகவல் கிடைத்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனது அறிவுறுத்தலின் பேரில் அந்த போஸ்டர்களை உடனடியாக அகற்ற தனது ஆதரவாளர்களை அனுப்பியதாகவும், பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சுருக்கமாக உரையாற்றியதாகவும் கூறியுள்ளார்.
அன்றிரவு ஆற்காடு வீராச்சாமி மற்றும் துரைமுருகன் ஆகியோர் தன்னைச் சந்தித்து, தலைவர் வருத்தப்படும்படி ஏன் நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு தாம் எப்போதும் கருணாநிதிக்கு விசுவாசமாகவே இருந்ததாக பதிலளித்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், என்னுடைய மார்பை பிளந்து பார்த்தால் அங்கே கருணாநிதிதான் இருக்கிறார் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியதாகவும், இருப்பினும் கருணாநிதியின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2009-ஆம் ஆண்டு முரசொலியில் வெளியான கவிதையில், தன்னை கருணாநிதிக்குப் பிறகு தலைவராக வேண்டும் என்ற பேராசை கொண்டவர் போல சித்தரித்ததாகவும், அந்த நிகழ்வு முற்றிலும் கற்பனையானது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். அந்தக் கவிதையில் இடம்பெற்ற உரையாடல்கள் எதுவும் நடந்ததில்லை என்றும், அது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் புனைவு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2026 ஜூலை 11-ஆம் தேதி முரசொலியில் அதே குற்றச்சாட்டுகள் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பது, தன்னை அரசியல் ரீதியாக களங்கப்படுத்தும் நோக்கத்தில்தான் என வைகோ கூறியுள்ளார். 1993-ல் தன் மீது கொலைப்பழி சுமத்தி திமுகவிலிருந்து நீக்கியது போலவே, தற்போதும் பொதுமக்கள் மத்தியில் தன் மீது வெறுப்பை உருவாக்க முயற்சி நடைபெறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேநேரத்தில், 2006-ஆம் ஆண்டு அதிமுகவுடனும், 2017-ஆம் ஆண்டு திமுகவுடனும் கூட்டணி அமைத்தது தனது அரசியல் வாழ்க்கையின் இரண்டு பெரிய தவறுகள் என்றும் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது மதிமுக சரியான அரசியல் பாதையில் பயணித்து வருவதாகவும், இனி எந்தச் சூழலிலும் தனது இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, பொய்மை நிலைக்காது, மெய்மைதான் வெல்லும். என் மனசாட்சி தூய்மையாக இருக்கிறது.
இந்த விளக்கம் என் தொண்டர்களுக்காக மட்டுமல்ல, பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் உண்மையை அறிந்துகொள்ளவே என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ