Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூலை (ஹி.ச)
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் தனது மனைவி ஷர்மிளா மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தார்.
மாதவரம் ரவுண்டானா அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த கணவர் நித்தியானந்தம் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b