திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை , 18 ஜூலை (ஹி.ச.) திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்ததால், வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அ
A


திருமலை , 18 ஜூலை (ஹி.ச.)

திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்ததால், வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின.

இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வரிசை சிலாதோரணம் பகுதி வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டது.

டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்கள் ஏழுமலையானை இலவச சர்வதரிசனம் செய்வதற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் கூட்ட நெரிசல் காரணமாக 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 74,096 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

இதில் 36,562 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3.66 கோடியாக பதிவாகியுள்ளது.

மேலும், அன்றைய தினம் பக்தர்களுக்காக 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

2.98 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

உடல்நலக் குறைவு ஏற்பட்ட சுமார் 3,890 பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

பக்தர்கள் பொறுமையுடன் இருந்து, தேவஸ்தான ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA