Enter your Email Address to subscribe to our newsletters

குண்டூர் , 18 ஜூலை (ஹி.ச.)
குண்டூரில் பெண் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்ததுடன், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
குண்டூரில் உள்ள கிருஷ்ணபாபு காலனியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் வகித்து வந்த கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கை பதிவில்,
பெண்களை அவமதிக்கும் செயல்களை எந்த நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு சமூகத்தில் இடமில்லை என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கட்சியின் பெயரை பயன்படுத்தி தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது என்றும், பெண்களின் பாதுகாப்புக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நாரா லோகேஷ் கூறுகையில்,
முதல்வரின் உத்தரவின்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதரவு அல்லது கட்சி தொடர்பு யாரையும் சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றாது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.
மாநில உள்துறை அமைச்சர் வங்கலபூடி அனிதாவும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், விசாரணையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சொந்த கட்சியை சேர்ந்த நபர் மீதே அரசு உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பெண்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்ற நிலைப்பாட்டை ஆந்திர அரசு வெளிப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA