Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீஹரிகோட்டா , 18 ஜூலை (ஹி.ச.)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ‘மிஷன் ஆகமன்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவுதல் வெற்றி பெற்றது.
இதற்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மகிழ்ச்சி தெரிவித்து, விஞ்ஞானிகள் மற்றும் ஸ்கைரூட் நிறுவன குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா முன்னேறி வருவதற்கு விக்ரம்-1 ராக்கெட் ஏவுதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கும், அவர் வழங்கி வரும் ஊக்கத்திற்கும் கிடைத்த பலன்.
விண்வெளி ஆராய்ச்சி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை வரவேற்றதன் மூலம், நாட்டில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகவும், இளைஞர்களிடையே தொழில்முனைவு எண்ணம் வளரவும் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
விடாமுயற்சி, புதுமையான சிந்தனை இருந்தால் தனியார் துறையிலும் மிகப்பெரிய சாதனைகளை உருவாக்க முடியும் என்பதை இந்த முயற்சி நிரூபித்துள்ளது. இது ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
இந்த வெற்றியில் தனியார் துறைக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் IN-SPACe அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானது. விக்ரம்-1 ராக்கெட்டை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினர், இஸ்ரோ மற்றும் IN-SPACe விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி இந்தியாவின் விண்வெளித் துறையை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றும், வருங்கால தலைமுறைகளுக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA