இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி - மகனுடன் ஏவுதலை பார்வையிட்ட அமைச்சர் லோகேஷ்
ஸ்ரீஹரிகோட்டா , 18 ஜூலை (ஹி.ச.) இந்திய விண்வெளித் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கும் வகையில், நாட்டின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத
A


ஸ்ரீஹரிகோட்டா , 18 ஜூலை (ஹி.ச.)

இந்திய விண்வெளித் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கும் வகையில், நாட்டின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (ஷார்) முதல் ஏவுதளத்தில் இருந்து ‘மிஷன் ஆகமன்’ என்ற பெயரில் இந்த ஏவுதல் நடைபெற்றது. மதியம் 12.05 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், தனது மகன் தேவான்ஷுடன் இணைந்து ஏவுதல் பார்வையாளர் அரங்கில் இருந்து பார்வையிட்டார்.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த விக்ரம்-1 ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் சுமார் 350 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் பேலோடுகளை 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள தாழ் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட என்ஜின்கள், மேம்பட்ட உந்துவிசை அமைப்புகள் மற்றும் திட எரிபொருள் பூஸ்டர்கள் ஆகியவை விக்ரம்-1 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் நோக்கில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனது முதல் பயணத்தில் விக்ரம்-1 ராக்கெட் 4 சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு பேலோடுகளை விண்ணுக்கு எடுத்துச் சென்றது. இதில் கிரஹாஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிக்யூப்ட் நிறுவனங்களின் தொழில்நுட்ப சோதனை பேலோடுகளும், ஸ்கைரூட் நிறுவனத்தின் ‘ஸ்கோப்’ செயற்கைக்கோளும் அடங்கும்.

மேலும், காஸ்மோஸ் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ‘காஸ்மிக் ப்ளூம்’ என்ற கலைப் பொருள் மற்றும் மற்றொரு மைக்ரோ-ஆர்ட் பொருளும் இந்த ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் சந்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றி, இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவுடன் இணைந்து தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வர்த்தக ஏவுதல்களில் முக்கிய பங்கு வகிக்கும் புதிய சகாப்தத்திற்கு இந்த சாதனை தொடக்கமாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA