Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 18 ஜூலை (ஹி.ச.)
பழனி அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.35 ஏக்கர் நிலம், போலியான நபர்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக திருநெல்வேலியில் சண்முகசுந்தரம் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சண்முகசுந்தரம், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் திருவிழாக்களில் அலங்காரம் மற்றும் டெக்கரேஷன் பணிகளை செய்து வருபவர் ஆவார்.
பழனி கோயில் நிலம் கைமாற்றப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் நெல்லையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக நிலத்தைப் பத்திரப்பதிவு செய்தவர்களிடம், நெல்லையிலிருந்து யாரெல்லாம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்கள் என்பது குறித்த விவரங்களைச் சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை பெறுவதற்காக சண்முகசுந்தரத்தின் மனைவி மற்றும் அவரது குழந்தைகளிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின்னர் மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் குறித்த முழு விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b