தருமபுரி நகராட்சி பள்ளியில் தவெக நிர்வாகி பங்கேற்ற நிகழ்வு சர்ச்சை - விளக்கம் கோரி கோரிக்கை
தர்மபுரி, 18 ஜூலை (ஹி.ச.) தருமபுரி நகராட்சி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை
தவெக


தர்மபுரி, 18 ஜூலை (ஹி.ச.)

தருமபுரி நகராட்சி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான தகவலின்படி, தவெக தருமபுரி நகரச் செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பள்ளி வளாகத்திற்குச் சென்று மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கியதுடன், அதனை ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

அரசுப் பள்ளி வளாகங்களில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பங்கேற்பை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்கள் அரசியல் சாயல் பெறக் கூடாது என்றும் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பள்ளி நிர்வாகத்தின் அனுமதி பெறப்பட்டதா, பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் அல்லது கல்வித்துறை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam