Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு 18 ஜூலை (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில், ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடிவேரி அணையில் அருவிபோல் தண்ணீர் கொட்டும் நாட்களில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
கடந்த ஒரு மாதமாக பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் முழுவதும் கொடிவேரி பாசன வாய்க்காலுக்கு திருப்பிவிடப்பட்டதால், அருவியில் வெளியேறும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.
இதனால் அருவியில் தண்ணீர் கொட்டாத சூழல் நிலவியதால், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொடிவேரி அணையின் அருவியில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக வெறிச்சோடி காணப்பட்ட கொடிவேரி அணை தற்போது மீண்டும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது.
அருவியில் ஆர்வமுடன் குளித்து விளையாடி, குடும்பத்தினருடன் சுற்றுலாவை ரசித்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam