Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 18 ஜூலை (ஹி.ச)
புதுச்சேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரிடம் 33.75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காளிதாஸ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் காளிதாஸ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் இருபதுக்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கடந்த 2023-இல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் இவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
போலீசாரிடம் சிக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த காளிதாஸ், மதுரையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான சிபிசிஐடி தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தி குற்றவாளி காளிதாசை கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள காளிதாஸை புதுச்சேரிக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் வேறு ஏதேனும் மோசடி வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்தும் கைது செய்யப்பட்ட காளிதாஸிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b