ஆடித் திருவிழாவை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை - விவசாயிகள், வியாபாரிகள் உற்சாகம்
சேலம், 18 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டத்தின் முக்கிய கால்நடை சந்தைகளில் ஒன்றான கொங்கணாபுரம் வாரச்சந்தை வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் கூடுவது வழக்கம். இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியுள்ளதையொட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில்
ஆடித் திருவிழாவை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை - விவசாயிகள், வியாபாரிகள் உற்சாகம்


சேலம், 18 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தின் முக்கிய கால்நடை சந்தைகளில் ஒன்றான கொங்கணாபுரம் வாரச்சந்தை வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் கூடுவது வழக்கம்.

இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியுள்ளதையொட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் என்பதால் ஆடுகளுக்கான தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

கொங்கணாபுரத்தில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று வாரச்சந்தை கூடியுள்ளது.

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

அதிகாலை முதலே சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. கிடா ஆடுகள், பொட்டை ஆடுகள், குட்டி ஆடுகள் என அனைத்து வகை ஆடுகளும் அதிக அளவில் விற்பனையாகின.

இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூபாய் 2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகளின் விலை கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்திருந்தாலும், திருவிழா தேவைக்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இந்த விற்பனை மூலம் விவசாயிகளுக்கும், கால்நடை வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b