Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 18 ஜூலை (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை குடிபோதையில் தாக்கியதாக கூறப்படும் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் தடுமாறியபடி வந்த ஒருவரை போலீசார் நிறுத்தினர்.
வாகனத்தை நிறுத்திய அவர், அதை காலால் எட்டி தள்ளிவிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவரை போலீசார் கண்டித்தபோது, குடிபோதையில் இருந்த அந்த நபர் திடீரென ஒரு போக்குவரத்து போலீசாரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவரது சட்டையைப் பிடித்து இழுத்து கொலை மிரட்டலும் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மணப்பாறை அருகே பிச்சமணியாரம்பட்டியைச் சேர்ந்த 25 வயதான பாலகிருஷ்ணன் என்பதும், கட்டிடத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில், போலீசாரை தாக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam