Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 18 ஜூலை (ஹி.ச.)
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருப்புமுனையாக, பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் லிங்கா அவன்யூ பகுதியில் உள்ள அவரது வீட்டில் 8 பேர் கொண்ட சிபிசிஐடி தனிப்படையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ஆவணங்கள், பத்திரப்பதிவு கோப்புகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழனி கோயிலுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடிக்கு பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது அவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
சோதனையின் முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b