இந்திய பாஸ்போர்ட் மூலம் பங்களாதேஷ் செல்ல முயன்ற வெளிநாட்டவர் கைது - போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது அம்பலம்
சென்னை, 18 ஜூலை (ஹி.ச) இந்திய குடியுரிமை பெற்றவர் போல் போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் பெற்று, அதன்மூலம் பங்களாதேஷ் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பன்னாட்டு
Nn


சென்னை, 18 ஜூலை (ஹி.ச)

இந்திய குடியுரிமை பெற்றவர் போல் போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் பெற்று, அதன்மூலம் பங்களாதேஷ் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சீட்டு, கந்துவட்டி மற்றும் போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பங்களாதேஷைச் சேர்ந்த 33 வயதான எம்.டி. போஜோர் அலி என்பவர், கடந்த 2005-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர் தனது பெயரை பஸார் அலி என மாற்றி, பிறந்த இடம் மற்றும் பிறந்த தேதியையும் போலியாக பதிவு செய்து ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட இந்திய ஆவணங்களை பெற்றுள்ளார்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்திய பாஸ்போர்ட் பெற்று, பலமுறை இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் சென்று குடும்பத்தினரை சந்தித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி மீண்டும் பங்களாதேஷ் செல்ல முயன்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எம்.டி. போஜோர் அலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ