Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 18 ஜூலை (ஹி.ச.)
சென்னையிலிருந்து பெரம்பலூர், திருச்சி வழியாக மதுரைக்கு சென்ற ஸ்லீப்பர் கோச் ஆம்னி பேருந்து, இன்று அதிகாலை 23 பயணிகளுடன் புறப்பட்டது. காலை சுமார் 5.30 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வி.களத்தூர் பிரிவு பகுதியில் சென்றபோது, பேருந்தின் முன்பகுதியில் திடீரென புகை வெளியேறியது.
இதைக் கவனித்த ஓட்டுநர், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த இப்ராஹிம் (63), உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி, அனைத்து பயணிகளையும் அவசரமாக கீழே இறக்கினார். சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் தீயை அணைத்து, மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
இந்தச் சம்பவம் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam