Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 18 ஜூலை (ஹி.ச)
கோவை மாவட்டத்தின் முக்கிய காய்கறி விற்பனை மையமாக விளங்கும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
வழக்கமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து அதிகளவில் உருளைக்கிழங்கு வரத்து இருக்கும். ஆனால் தற்போது உதகையில் உருளைக்கிழங்கு சீசன் இல்லாததால் அங்கிருந்து வரும் உருளைக்கிழங்கின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு அதிகளவில் கொண்டு வரப்படுகிறது.
வட மாநிலக் கிழங்குகளை விட, சுவை மற்றும் தரம் அதிகமாக இருக்கும் உள்ளூர் ஊட்டி உருளைக்கிழங்குகளுக்கு சந்தையில் எப்போதும் கூடுதல் விலை கிடைக்கிறது.
மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் இருந்து தரம் பிரிக்கப்படும் இந்த உருளைக்கிழங்குகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் தினசரி லாரிகள் மூலம் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன
வட மாநில உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு தட்டுப்பாடு ஏற்படாமல் சீரான விற்பனை நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b