Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 18 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த ராணி என்கின்ற 45 வயது பெண்மணி கடந்த சில தினங்களுக்கு முன்பு காலையில் நடை பயிற்சி சென்றபோது, மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி வந்த நபர்கள் அவரின் கழுத்தில் அரிவாளை வைத்து அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர்.
இந்த நிலையில், ராணி அளித்த புகாரின் அடிப்படையில் தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து அருகாமையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மூன்று நபர்கள் அந்த வழியாக சுற்றி திரிவது தெரிய வந்த நிலையில், அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று அவர்களது பாணியில் விசாரித்துள்ளனர்.
அப்பொழுது, அந்த மூன்று நபர்களும் கணக்கப்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 24) மற்றும் மணிகண்ட பிரபு (வயது 25) என்பதும், மற்றொரு நபர் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்த நிலையில், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது, ராணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் உள்ள நிலையில், அவரது தென்னந்தோப்பில் வழக்கமாக தேங்காய் பறிப்பதற்காக செல்லும் இந்த நபர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு இந்த வழிப்பறி சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து, அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் வேறு ஏதேனும் வழிப்பறி சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN