Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்கால், 18 ஜூலை (ஹி.ச.)
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில், இன்று சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் பக்தர்கள், திருநள்ளாறிலும் சனீஸ்வர பகவானை தரிசிக்க அதிகாலை முதலே வருகை தந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று சனிக்கிழமை என்பதையொட்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக, பக்தர்கள் நளதீர்த்தக் குளத்தில் புனித நீராடி, கலித்தீர்த்த விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam