Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 18 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து,போலீசார் தெரிவித்ததாவது, திருத்தணியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இக்கோ கார், செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கேஸ் டேங்கர் லாரியை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, டேங்கர் லாரி காரின் பின்புறத்தில் பலமாக மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதி நொறுங்கியது.
இந்த விபத்தின் போது இக்கோ வாகனத்தில் 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற நான்கு பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN