Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூலை (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், மேலும் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் யூடியூப்பர் ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு, நரேஷ் உள்ளிட்ட 12 பேரை திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணையில்,
மேகாலயா பிராஜக்ட் என்ற பெயரில் சுமார் 15 தவெக எம்.எல்.ஏ.க்களை பெரும் தொகை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து, சட்டமன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களிக்கச் செய்து ஆட்சியின் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் சட்டமன்ற வாக்கெடுப்பில் குறிப்பிட்டபடி வாக்களித்தால் ரூ.35 கோடி வழங்கப்படும் என பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கருணாநிதி (கொரட்டூர்), சரவணன் (சாலிகிராமம்), வினோத் வெங்கடேசன் (பள்ளிக்கரணை) ஆகிய 3 பேரை திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து ரூ.2.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பணம் ஹவாலா பரிவர்த்தனை மூலம் வந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கைதானவர்களின் செல்போன்கள் சைபர் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கின் பின்னணியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ