Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 18 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சரவணப்பாக்கம் சாலையில் பிரபல ரவுடி மோகன்ராஜ் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளன.
குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரை என்பவர் (வயது 25) மற்றும் 16 வயது சிறுவன் ராமச்சந்திரன் ஆகிய இருவரை கொலை செய்த வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார்.
இது தவிர கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய பல வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த மோகன்ராஜை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b