தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை, 18 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு இன்று ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடும் முடிவையும், நவம்பர் 1-ஆம் தேதியை
தங்கம் தென்னரசு


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடு இன்று ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடும் முடிவையும், நவம்பர் 1-ஆம் தேதியை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் என அறிவித்ததையும் திமுக அரசுதான் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பல்வேறு அறிஞர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அன்றைய நாளில் தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம் என்பதால் அந்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது சரியல்ல என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்காக தியாகி சங்கரலிங்கனார் உயிர்தியாகம் செய்ததையும், பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகச் சூட்டிய வரலாற்றையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்ததாகவும், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க உயிர்நீத்த தியாகிகளைப் போற்றும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதியை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் என அறிவித்து, அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P