பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் மனிதநேயத்துக்கே அவமானம் - ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி
குண்டூர் , 19 ஜூலை (ஹி.ச.) குண்டூரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் மனிதநேயத்துக்கே அவமானம் என்று ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெ
A


குண்டூர் , 19 ஜூலை (ஹி.ச.)

குண்டூரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் மனிதநேயத்துக்கே அவமானம் என்று ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குண்டூரில் பெண்ணுக்கு எதிராக நடைபெற்ற இந்த கொடூர சம்பவம், ஆந்திர மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை காட்டுகிறது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இந்த சம்பவம் புதன்கிழமையே நடைபெற்ற நிலையில், 3 நாட்கள் அதை மறைக்க முயற்சி செய்யப்பட்டதாக தெரிகிறது.

சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்ட பிறகே அரசு நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் முதல் முறையாக தாக்குதல் குறித்து போலீசில் புகார் அளித்தபோதே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த அளவுக்கு கொடூரமான சம்பவம் நடந்திருக்காது. புகார் அளித்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்காமல் போலீசார் அலட்சியம் காட்டியது ஏன்?

பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை ஏற்று நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் காவல் நிலையங்கள் உள்ளன.

ஆனால் ஆளும் கட்சியினர் கூறுவதை மட்டும் கேட்டு செயல்படுவதற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

சம்பவம் தொடர்பான வீடியோ வெளியான பிறகே சட்டம் செயல்படுவது ஏன்? குற்றம் நடைபெறும் நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல், மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு நடவடிக்கை எடுப்பது எந்த வகையான காவல் நடவடிக்கை என்றும் ஜெகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் தங்களை காப்பாற்ற அரசு உள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறும் அரசு, உண்மையில் அதனை உறுதி செய்ய வேண்டும். “இதுதானா நீங்கள் கூறும் பெண்கள் பாதுகாப்பு? இதுதானா உங்கள் நல்லாட்சி?” என்று சந்திரபாபு அரசுக்கு கேள்வி எழுப்பிய ஜெகன், பெண்களின் கோபமே அரசுக்கு தக்க பாடம் புகட்டும் என்று எச்சரித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA