Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 ஜூலை (ஹி.ச.)
கோவை பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்து சிறுவர்கள் தலைக்கவசம் கூட அணியாமல், அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் பைக்குகளை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் காட்சிகளை அவர்களுடன் இருந்த நண்பர்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு சென்றது.
இதனையடுத்து வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கிணத்துக்கடவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் போலீசார் பைக் சாகசத்தில் ஈடுபட்டது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதை உறுதி செய்தனர். சிறுவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்களுக்கு வாகனத்தை ஓட்டக் கொடுத்த குற்றத்திற்காக ஐந்து சிறுவர்களின் பெற்றோர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாகசத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் அனுமதிப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுபோன்ற சம்பவங்களில் பெற்றோருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும் தங்கள் பிள்ளைகளுக்கு பைக் வாங்கிக் கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b