Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 19 ஜூலை (ஹி.ச.)
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் தடையை மீறியோ, உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமலோ பந்தயங்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பான காவல்துறை ஆய்வாளர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வாண்டாக்கோட்டையில் நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியாக மாட்டு வண்டி பந்தயம் நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசின் முறையான அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயங்களை நடத்தக்கூடாது என்று சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் காவல்துறையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத விழா குழுவினர், தடையை மீறி இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று இந்த பந்தயத்தை கண்டுகளித்தனர்.
நீதிமன்ற உத்தரவையும், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பந்தயம் நடத்திய விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b