Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)
சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்ற பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுடிவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பு என்ற தமிழழகு (26), 'A' வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு, தமிழழகு மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் என்ற சூர்யா (24) ஆகியோரை, அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக, திருமுடிவாக்கம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குன்றத்தூர் அருகே காவனூர் மைதானப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தமிழழகு, தலைமை காவலர் விஜயகுமாரின் வலது முழங்கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் தமிழழகின் வலது கணுக்காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தார்.
காயமடைந்த தமிழழகு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலில் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
காயமடைந்த தலைமை காவலர் விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட தமிழழகு மற்றும் சூர்யா ஆகியோர் நாட்டுவெடிகுண்டுகள் தயாரித்து வந்ததாக போலீசார் சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சூர்யா, பிரபல ரவுடி ஓட்டேரி சிலம்புவின் உறவினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam