சோனம் வாங்சுக் உடல்நிலையில் தொடர் கண்காணிப்பு தேவை - சப்தர்ஜங் மருத்துவமனை தகவல்
புதுடெல்லி, 19 ஜூலை (ஹி.ச) காலநிலை மற்றும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்
சோனம் வாங்சுக் உடல்நிலையில் தொடர் கண்காணிப்பு தேவை - சப்தர்ஜங் மருத்துவமனை தகவல்


புதுடெல்லி, 19 ஜூலை (ஹி.ச)

காலநிலை மற்றும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

போராட்டக் களத்தில் வாங்சுக்கை பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து, அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் வலியுறுத்தினர்.

நேற்று அவரது உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டியதை அடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், டெல்லி காவல்துறையினரால் திட்டமிட்ட முறையில் நேற்று காலை ஜந்தர் மந்தரில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தற்போது சீரான நிலையில் உள்ளார். ஆனால் நீண்ட நாள் உண்ணாவிரதத்தின் உடலியல் பாதிப்புகள் காரணமாக தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுகாதார அறிக்கையின்படி,

வாங்சுக்கின் உயிர்நிலை குறியீடுகள் சீராக உள்ளன, இருப்பினும் அவரது ரத்த பரிசோதனை முடிவுகளில் சிறிய அளவில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ச்சியான மருத்துவ தலையீடு மற்றும் தொடர் கண்காணிப்பு அவசியம் என சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூட்டாக முடிவு செய்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் குழுவினர் மற்றும் எய்ம்ஸ் நிபுணர் ஒருவர் தொடர்ந்து ஆலோசனை வழங்கியும், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ தலையீட்டிற்கு வாங்சுக்கின் குடும்பத்தினர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை விரைவில் ஏற்றுக்கொள்ளுமாறு அவரையும் அவரது குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடரும் நிலையில், வாங்சுக் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b