தாராபுரம் வழக்கறிஞர் படுகொலை - கேரள கூலிப்படைக்கு பணம் கொடுத்த இரு பெண்கள் கைது
திருப்பூர், 19 ஜூலை (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் எல்.முருகானந்தம் (41), சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர். இவரது கொலை வழக்கில் தற்போது பரபரப்பு திருப்பமாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்
Dharapuram Advocate


திருப்பூர், 19 ஜூலை (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் எல்.முருகானந்தம் (41), சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர். இவரது கொலை வழக்கில் தற்போது பரபரப்பு திருப்பமாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் முருகானந்தத்தின் தந்தை, முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமி. 1999-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி காங்கேயம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகானந்தத்தின் சித்தப்பாவான தண்டபாணி (60) குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால், போதிய சாட்சிகள் இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தந்தையின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பதால், முருகானந்தம் சிறு வயதிலேயே வழக்கறிஞராக வேண்டும் என்று படித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார்.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே தண்டபாணிக்கு சொந்தமான தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 4-வது மாடி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, மாணவர்களின் பாதுகாப்பு கருதி முருகானந்தம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, அந்த கூடுதல் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

இதனால் தண்டபாணி கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

சொத்து தகராறு தொடர்பாக நில அளவீடு செய்யவும், பள்ளியின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவும் 2025-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நீதிமன்ற ஊழியர்களுடன் முருகானந்தம் தாராபுரம் வந்தார்.

அப்போது பள்ளி வளாகத்தில் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கூலிப்படை, அவரை பின்புறமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் தண்டபாணி தாராபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த கொலை தொடர்பாக முதலில் தண்டபாணி, அவரது உறவினர் நாட்டுத்துரை, கூலிப்படையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, நாகராஜன், சுந்தரன், ராம் உள்ளிட்ட 6 பேர் சரணடைந்தனர். பின்னர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பாலமுருகன், சதீஷ்குமார் உள்ளிட்ட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முதல் சாட்சியாக இருந்த கடலை ரைஸ்மில் அதிபர் தங்கவேல், கேரள கூலிப்படையினரால் கொலை முயற்சிக்கு ஆளானார். அதில் அவர் உயிர் பிழைத்து, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டி, கூலிப்படைக்கு பணம் கொடுத்து, சாட்சிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக, ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்த தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணியின் மனைவி சரஸ்வதி மற்றும் அவரது மகன் கார்த்தியின் மாமியாரும், சேலத்தில் ஆடை உற்பத்தி தொழில் நடத்தி வருபவருமான ஹேமா ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்த இருவரையும் இன்று போலீசார் கைது செய்து, தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த இரு பெண்களின் கைதுடன், வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN