Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் நடைபெற்ற ட்ரீம் ரன்னர் 15-வது ஆண்டு மாரத்தான் போட்டியில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்ததுடன், தனது 169-வது மாரத்தான் ஓட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கிய ட்ரீம் ரன்னர் மாரத்தான், கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மாரத்தான் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. 21 கிலோமீட்டர் பிரிவு நேப்பியர் பாலத்தில் இருந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வரை நடைபெற்றது. 10 கிலோமீட்டர் பிரிவு நேப்பியர் பாலத்தில் இருந்து சாந்தோம் வரை நடத்தப்பட்டது.
21 கிலோமீட்டர் பிரிவில் சுமார் 3,000 பேரும், 10 கிலோமீட்டர் பிரிவில் சுமார் 7,000 பேரும் பங்கேற்று ஓடினர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
ட்ரீம் ரன்னர் மாரத்தான் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இன்று நான் பங்கேற்றது எனது 169-வது மாரத்தான் ஆகும் என்றார்.
மேலும், இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து வயதினரும் நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியை தங்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியத்திற்கு சுய ஒழுக்கம் மிகவும் அவசியம். அதனால் இதுபோன்ற மாரத்தான் போட்டிகளில் அனைவரும் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் ராஜு பிரசாத், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam