Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 ஜூலை (ஹி.ச.)
வீட்டு மின் நுகர்வோருக்கு, மீட்டர், மீட்டர் கணக்கீடு மற்றும் மின் கட்டண மதிப்பீட்டு
(Billing Assessment) செயல்முறைகளில் ஏற்படும் குறைபாடுகளால் தவறான மற்றும் அதிகப்படியான மின் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற தவறுகளைத் தடுக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஆய்வு அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இத்தகைய பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்திருக்க முடியும் என்பதால், அனைத்து பிரிவுகளிலும் காலமுறைப்படி திடீர் ஆய்வுகள் (Surprise Inspection) மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், Mass Raid உள்ளிட்ட அனைத்து ஆய்வு மற்றும் சேவை நடவடிக்கைகளிலும் சரியான மதிப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், மின் கட்டண மதிப்பீடுகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.
அவர்களின் ஆய்வு செயல்திறன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD) அறிவுறுத்தலின்படி, கடமையில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தேவையெனில் ஒழுங்கு நடவடிக்கை
(Disciplinary Proceedings) உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மேற்பார்வைப் பொறியாளர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களுக்கு உடனடியாக தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, விரைவான மற்றும் பிழையற்ற மின் கட்டண மதிப்பீட்டு பணிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், வட்டம், கோட்டம் மற்றும் துணைக் கோட்ட அளவிலான ஆய்வுப் பொறுப்பில் உள்ள அலுவலர்களுக்கு தெளிவான பொறுப்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் மின் நுகர்வோரின் திருப்தியை உறுதி செய்வதே நோக்கமாகும்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P