தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன்கள் வரத்து குறைவு
தூத்துக்குடி, 19 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் இன்று அதிகாலையில் கரைக்குத் திரும்பினர். பொதுவாக ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து
தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன்கள் வரத்து குறைவு


தூத்துக்குடி, 19 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் இன்று அதிகாலையில் கரைக்குத் திரும்பினர்.

பொதுவாக ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிக அளவில் கொண்டு வருவது வழக்கம். இதனால் சனிக்கிழமைகளில் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகமாகக் காணப்படும்.

ஆனால், கடந்த சில வாரங்களாக ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்களுக்குக் கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. கரைக்குத் திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள் பலத்த காற்று காரணமாகக் குறைந்த அளவு மீன்களுடனேயே கரைக்குத் திரும்ப நேரிட்டது.

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்ட நிலையில், மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் குவிந்தனர்.

வரத்துக் குறைவால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் வாங்கப்படும் மீன்கள் சுவை மிகுந்து காணப்படுவதால், விலை உயர்ந்து காணப்பட்ட போதிலும் விலையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இன்றைய நிலவரப்படி சீலா (வஞ்சிரம்) மீன்: 1 கிலோ ₹1,300 முதல் ₹1,600 வரை விற்பனையானது. விளை மீன்: 1 கிலோ ₹650 முதல் ₹750 வரையிலும் பாறை மீன்: 1 கிலோ ₹500 முதல் ₹550 வரையிலும் ஊழி மீன்: 1 கிலோ ₹450 வரையிலும் நண்டு: 1 கிலோ ₹600 வரையிலும் சாளை (மத்தி) மீன்: ஒரு கூடை ₹2,000 முதல் ₹3,000 வரையிலும் விற்பனையானது.

மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்ட நிலையில், மீன் ஏலம் ஆரம்பித்த சில மணி நேரத்தில் அனைத்து மீன்களும் நல்ல விலைக்கு விற்றுத் தீர்ந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Hindusthan Samachar / vidya.b