திருச்சி சிறப்பு முகாமில் 5 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சி, 19 ஜூலை (ஹி.ச.) திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுகந்தி, மதுசன், பரிஷ்டா, ஜான்சன் மற்றும் ஜனனி ஆகிய 5 பேரும் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண
திருச்சி சிறப்பு முகாமில் 5 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்


திருச்சி, 19 ஜூலை (ஹி.ச.)

திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுகந்தி, மதுசன், பரிஷ்டா, ஜான்சன் மற்றும் ஜனனி ஆகிய 5 பேரும் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தங்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

முகாமிற்கு வெளியே உள்ள தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

இன்று காலை முதல் முகாமில் உள்ள தங்களது அறைகளிலேயே அமர்ந்து அவர்கள் உணவை உட்கொள்ள மறுத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டம் குறித்துத் தகவலறிந்த சிறப்பு முகாம் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நீடித்தால் அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டினர் தங்களை விடுதலை செய்யக் கோரி இது போன்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்பதால், இந்தச் சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b