Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு, 19 ஜூலை (ஹி.ச.)
நடப்பாண்டுக்கான 57 நாள் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3 ஆம் தேதி தொடங்கியது.
ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசிக்க இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புனித அமர்நாத் யாத்திரை இன்று (ஜூலை 19) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் யூனியன் பிரதேசம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாரம்பரிய பஹல்காம் பாதை மற்றும் குறுகிய பால்டால் பாதை ஆகிய இரு வழித்தடங்களிலும் யாத்திரை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காஷ்மீர் கோட்ட ஆணையர் அன்ஷுல் கார்க் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
அடுத்த சில நாட்களில் மோசமான வானிலை நிலவும் என்ற முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டும், யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டும், ஸ்ரீ அமர்நாத்ஜி யாத்திரை 19.07.2026 முதல் பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழிகளிலும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, பால்டால் மற்றும் நுன்வான், சந்தன்வாரி ஆகிய அடிப்படை முகாம்களில் இருந்து யாத்ரீகர்கள் மேலே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள புனித குகைக்கு செல்லும் மலைப்பாதைகள் வழுக்கும் தன்மையுடனும், பாதுகாப்பற்றதாகவும் மாறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதைகள் சேதமடையும் சூழல் இருப்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வானிலை சீரான பிறகு, எல்லைப்புற சாலைகள் அமைப்பின் குழுவினர் பாதைகளை சீரமைத்து பாதுகாப்பானது என அறிவித்த பின்னரே யாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b