ஊழல் இல்லாத ஆட்சி தருவேன் என்று வெளிப்படையாக கூறிய முதலமைச்சரை இப்போதுதான் பார்க்கிறோம் – காதர் மொய்தீன்
சென்னை, 19 ஜூலை (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஒன் ஹெல்த் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நுரையீரல் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பின்னர் செய்
Kadhar


சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஒன் ஹெல்த் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நுரையீரல் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், அந்த அரசுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

ஊழல் முழுமையாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

ஆனால், 'ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவேன்' என்று வெளிப்படையாக உறுதியளித்த முதலமைச்சரை இப்போதுதான் பார்க்கிறோம். அந்த வாக்குறுதியை மக்கள் நம்பும் சூழலும் உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதை வரவேற்ற அவர், எதிர்காலத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றார்.

அரசால் மட்டும் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க முடியாது என்றும், மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; அதற்கான விழிப்புணர்வு இயக்கங்கள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

கொலை, பாலியல் பலாத்காரம், திருட்டு உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்களின் பின்னணியில் போதைப்பழக்கமே முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்ட காதர் மொய்தீன், போதையில் தான் பலரும் தவறுகளை செய்கிறார்கள்.

போதையற்ற சமூகத்தை உருவாக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

தென் மாநிலங்கள் முழுவதும் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றும், தமிழகம் உலகிற்கு முன்மாதிரியாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதை தாங்கள் ஏற்கமாட்டோம் என்றும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களே எடுப்பார்கள் என்றும் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ