Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 19 ஜூலை (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-வது கட்ட அகழாய்வுப் பணிகளை பள்ளிக்கல்வி, தொல்லியல், கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திறந்தவெளி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய அரசுகள் மேற்கொண்ட நல்ல திட்டங்கள் மற்றும் பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும், கீழடி அகழாய்வுப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கீழடி தமிழர்களின் நாகரிகத்திற்கு மட்டுமல்ல, உலக நாகரிகத்திற்கே தாய்மடி போன்ற இடமாகும். அகழாய்வில் கிடைத்த நெசவுத் தொழிலுக்கான தக்களிகள், கண்ணாடி மணிகள், சாயத் தொட்டியுடன் கூடிய உறை கிணறுகள் போன்றவை, தமிழர்களின் பழங்கால தொழில்நுட்ப அறிவையும், நீர் மறுசுழற்சி முறையையும் வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய அறிவியல் மற்றும் தொல்லியல் சான்றுகளை முறையாக தொகுத்து, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து உலகளவில் கீழடியின் பெருமையை எடுத்துரைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
அரசுப் பள்ளிகள் குறித்து பேசிய அமைச்சர்,
அரசுப் பள்ளிகள் அரசின் இரு கண்கள் போன்றவை. மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலும் எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.
தேவையெனில் வீடு வீடாகச் சென்று மாணவர்களைச் சேர்த்து பள்ளிகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள கலையரங்கங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த வரவிருக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.
தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டண விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தவெக அரசின் ஊழலற்ற நிர்வாகத்தை பாராட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
பெருந்தலைவர் காமராசரின் நேர்மையான ஆட்சிப் பாதையில்தான் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டும், மதிய உணவுத் திட்டம் தரப்படுத்தப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் காமராசரின் ஆட்சியே தொடர்கிறது என்றார்.
அண்மையில் தனிப்பட்ட பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றது தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர்,
மத்திய வெளியுறவுத் துறையின் சட்டபூர்வமான அனுமதி பெற்று, தனிநபர் பாஸ்போர்ட்டில் விசா பெற்று அமெரிக்கா சென்றேன் என்று தெரிவித்தார்.
அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைந்து வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
தமிழக மக்கள் நல்ல தலைமைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த தலைமை தவெகவில் இருப்பதால் பலரும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
கட்சியில் இணையும் அனைவரையும் வரவேற்போம். அதே நேரத்தில், சட்டத்தின் ஆட்சியும், காமராசரின் கொள்கைகளும் கட்சியில் தொடர்ந்து நிலைநாட்டப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam