மருத்துவக் குழு அனுமதி கிடைக்காத விரக்தி -தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, 19 ஜூலை (ஹி.ச.) சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்த
Hang


சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (45), கடந்த 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தவர்.

தற்போது பாண்டிபஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

மது பழக்கம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

மருத்துவக் குழுவின் முன் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகி உடல்நிலை அறிக்கையை சமர்ப்பிக்காததால், அவரை மீண்டும் பணியில் சேர்க்க மருத்துவக் குழு அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், கடந்த இரண்டு மாதங்களாக தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு மருத்துவக் குழு அதிகாரிகளை ராஜபாண்டி தொடர்ந்து சந்தித்து வந்ததாகவும், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தொலைபேசியில் பேசிய பிறகு அறைக்குள் தூங்கச் சென்றுள்ளார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, ராஜபாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார், உடலை கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ