Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 19 ஜூலை (ஹி.ச.)
நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி சபரி வர்மன், சிறைக்குள்ளேயே தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் இந்த கொலையில் தொடர்புடையதாகக் கூறி மூன்று சிறைக் காவலர்கள் மற்றும் 8 சக கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சிறை நிர்வாக நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்ட 8 கைதிகளும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டவர்களில் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகியோர் அடங்குவர்.
நாகர்கோவில் சிறையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சாட்சியங்களை கலைக்காமல் இருக்கவும், சிறைக்குள் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் இந்த சிறை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b