Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 19 ஜூலை (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே, தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தரைமட்ட மேம்பாலத்தை பொதுமக்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுகத்தூர் அடுத்த பின்னத்துரை ஊராட்சிக்குட்பட்ட பொம்மன்கொட்டாய் பகுதியில் இருந்து கொல்லைமேடு செல்லும் வழியில், கே.ஜி. ஏரியூர் கிராமம் அருகே உள்ள ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்டகாலமாக சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கால்வாயின் குறுக்கே புதிய தரைமட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தன. ஆனால், பாலம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், கடப்பாறை மற்றும் இரும்புக் கம்பிகளை பயன்படுத்தி பாலத்தின் ஒரு பகுதியை உடைத்தனர்.
சிமெண்ட் கலவை சரிவர பயன்படுத்தப்படவில்லை என்றும், தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால், பாலம் திறப்பதற்கு முன்பே சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
எனவே, தரமற்ற முறையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி, தரமான முறையில் புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைமட்ட மேம்பாலத்தை பொதுமக்களே இடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam