Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 19 ஜூலை (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், வாராந்திர ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சஷ்டியை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகக் குவிந்துள்ளனர்.
அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.
இதனால் அடிவாரப் பகுதியில் உள்ள கிரிவீதி மற்றும் சன்னதி வீதிகள் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அதேபோல், பொதுத் தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
இன்று தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யச் சுமார் 3 மணி நேரம் வரை ஆனது. பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மலைக்கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோயிலுக்குச் செல்ல தற்காலிகமாக ஒருவழிப்பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்தை உறுதி செய்ய அடிவாரம் காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN