Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஜூலை (ஹி.ச.)
கடந்த 1981-ம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டின் நினைவாக மதுரை நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளில் இரண்டு பிரம்மாண்ட தோரணவாயில்கள் அமைக்கப்பட்டன.
மாட்டுத்தாவணியில் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே சங்கப் புலவர் நக்கீரர் பெயரிலும், கே.கே.நகர் பகுதியில் தந்தை பெரியார் பெயரிலும் இந்த நுழைவு வாயில்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டு சுமார் 43 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையின் வரலாற்று அடையாளமாக இவை திகழ்ந்து வந்தன.
இந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த வளைவுகள் பெரும் இடையூறாக மாறியுள்ளதாகக் கூறி மதுரை பி.பி.குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தோரணவாயில்களின் தூண்கள் சாலையின் நடுவே அமைந்திருப்பதால், வாகனங்கள் முந்திச் செல்லும்போது விபத்துகள் ஏற்படுவதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சுந்தரமோகன் அடங்கிய அமர்வு, பின்னர் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு, மதுரை மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
சாலைகள் அகலப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், 43 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அலங்கார வளைவுகளின் தூண்கள் தற்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே நிற்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் இந்த வளைவுகளை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாட்டுத்தாவணி அருகே உள்ள நக்கீரர் தோரணவாயில் மற்றும் கே.கே.நகரில் உள்ள பெரியார் தோரணவாயில் ஆகிய இரண்டையும் ஆறு மாத காலத்திற்குள் அகற்ற வேண்டும் என முதலில் உத்தரவிடப்பட்டது.
பின்னர் நடந்த மற்றொரு விசாரணையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கே.கே.நகர் உள்ளிட்ட அனைத்து தோரணவாயில்களையும் மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என மதுரை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசு விரும்பினால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், சாலையின் இருபுறமும் இணைக்கும் வகையில் புதிய பெரிய நுழைவு வாயில்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று நள்ளிரவில் கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் அகற்றும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, கே.கே.நகர் சாலைப் பகுதி முற்றிலும் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நவீன ரகக் கிரேன் மற்றும் இடிப்பு இயந்திரங்கள் மூலம், மேல் பகுதி மற்றும் பக்கவாட்டுத் தூண்கள் முறையாகக் கட்டப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் இன்றி பெரியார் தோரண வாயில் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
மாட்டுத்தாவணி நக்கீரர் வாயில் உள்ளிட்ட பிற தோரணவாயில்களை அகற்றும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b