பெருந்துறையில் ஆதிதிராவிடர் தொழிற்கூடப் பணிகளை அமைச்சர் வன்னியரசு ஆய்வு – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்
ஈரோடு 19 ஜூலை (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள தொழிற்கூடத்தில் நடைபெற்று வரும் பணிகளை சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வன்னியரசு


ஈரோடு 19 ஜூலை (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள தொழிற்கூடத்தில் நடைபெற்று வரும் பணிகளை சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தொழிற்கூடப் பணிகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து பின்னலாடை தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும், இதன் மூலம் 200 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தற்போது 30 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள தொழில் முனைவோர் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்த கட்டிடங்கள் குறித்து, அது ஏன் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறித்து கடந்தகால ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும். கட்டுமானப் பணிகள் முழுமையடையாததும், பயன்பாட்டிற்கு தயாராக இல்லாததுமே குறைந்த விண்ணப்பங்களுக்கு காரணம். மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்றார்.

சாதி அரசியல் காரணமாக தொழிற்கூடம் செயல்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

அதை நீங்களே கேள்வியிலும் பதிலிலும் கூறிவிட்டீர்கள். வெளியிலிருந்து போராடிய நாங்கள் தற்போது ஆட்சியில் இருக்கிறோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில்தான் எங்கள் கவனம் உள்ளது என்றார்.

சமூகநீதித் துறையின் பெயர் மாற்றம் தொடர்பாக,

எங்கள் தலைவர் திருமாவளவனின் கருத்தே எங்களின் கருத்து. தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதே உண்மையான தொண்டனின் கடமை என்று கூறினார்.

மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் பள்ளிகள், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், விடுதி உணவுக்கான நிதி உயர்வு மற்றும் அம்பேத்கர் கல்வி உதவித்தொகை உயர்வு குறித்து வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இந்த ஆண்டுப் பட்ஜெட் ஆக்கப்பூர்வமானதாகவும், விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்டங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது தொடர்பான கேள்விக்கு,

துறை சார்ந்த கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்று பதிலளித்தார்.

ஜெயராஜ்–பென்னிக்ஸ் காவல் மரணம் மற்றும் அண்மைய காவல் மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,

தற்போதைய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட முடியாது என்றார்.

மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தவறு செய்யக் கூடாது என்று முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதிகள் ஆறு மாதங்களுக்குள் நவீனப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், மாணவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam