சித்தா படிப்பு முடித்துவிட்டு, அலோபதி முறையில் ஆங்கில மருத்துவம் பார்த்த நபர் கைது
திண்டுக்கல், 19 ஜூலை (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமர்கோவில் சந்து பகுதியில், முறையான மருத்துவத் தகுதி இல்லாத ஒருவர் கிளினிக் நடத்தி, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு ரகசியத் தகவல் கிட
Siddha Doctor


திண்டுக்கல், 19 ஜூலை (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமர்கோவில் சந்து பகுதியில், முறையான மருத்துவத் தகுதி இல்லாத ஒருவர் கிளினிக் நடத்தி, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், மாவட்ட சுகாதாரப்பணி இணை இயக்குநர் டாக்டர் பாரதி அவர்களின் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கிளினிக்கிற்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி ஆய்வில், பழனி சேரன்ஜீவா நகரைச் சேர்ந்த 51 வயதான அமித்குமார் டிக்காதர் என்பவர் அந்த கிளினிக்கை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் டிப்ளமோ சித்தா மருத்துவப் படிப்பை மட்டுமே முடித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

ஆனால், அதற்கான மருத்துவ வரம்புகளை மீறி, அவர் நோயாளிகளுக்கு அல்லோபதி முறையில் ஆங்கில சிகிச்சை அளித்ததும், மாத்திரைகள் வழங்குவது மற்றும் ஊசி போடுவது போன்ற மருத்துவச் செயல்பாடுகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருந்ததும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவ விதிமுறைகளை மீறி செயல்பட்ட அமித்குமார் டிக்காதரை சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து, பழனி டவுன் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின் பேரில், பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித்குமார் டிக்காதரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN