Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 19 ஜூலை (ஹி.ச.)
தஞ்சாவூரில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பேராவூரணி வாரச்சந்தை, ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்காக கடந்த ஒரு ஆண்டாக மூடப்பட்டிருந்தது.
இந்த காலகட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக வாரச்சந்தை நடத்தப்பட்டு வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய சந்தை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி சந்தை ஏலம் விடப்பட்டது.
கடந்த முறை 12 மாதங்களுக்கு ரூ.10.60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சந்தை, இந்த முறை 8 மாத காலத்திற்கு ரூ.21.57 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் முன்பணம் மற்றும் அதிக வாடகை வசூலிக்க முயற்சிப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
முன்பு வார வாடகையாக ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரக்கணக்கில் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை வியாபாரிகள் சந்தைக்கு வந்தபோது புதிய வாரச்சந்தை திறக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பேருந்து நிலையம் அருகே சாலையில் காய்கறிகளை கொட்டி காலை 5.30 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பேராவூரணி–அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அரசு தரப்பில் அதிகாரிகள் யாரும் வராததால் வியாபாரிகள் தாங்களே புதிய சந்தையைத் திறந்து உள்ளே சென்று கடைகளை அமைத்து வியாபாரத்தைத் தொடங்கினர்.
இதற்கிடையில், பழைய சந்தையில் இருந்த வரிசைப்படி கடைகள் ஒதுக்கப்படாமல், ஏலத்திற்குப் பிறகு புதிய முறையில் கடைகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறி வியாபாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாங்கள் முன்பு வியாபாரம் செய்த இடங்களையே மீண்டும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P