எஸ்.ஐ.ஆர். பணியில் அலட்சியம் கூடாது- காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் உத்தரவு
ஐதராபாத் , 19 ஜூலை (ஹி.ச.) எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பட்டி விக்ரமார்கா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ்குமார் கவுட், மாநில காங்கிரஸ் பொறுப
A


ஐதராபாத் , 19 ஜூலை (ஹி.ச.)

எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதல்-மந்திரி பட்டி விக்ரமார்கா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ்குமார் கவுட், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மீனாட்சி நடராஜன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி,

எஸ்.ஐ.ஆர்.

தெலங்கானாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளில் அலட்சியம் காட்டக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணிகளுக்காக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்டாயம் களத்தில் இருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் முழுமையான மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும், பணிகளின் இறுதி பொறுப்பு அவர்களிடமே இருக்கும் என்றும் கூறினார்.

எஸ்.ஐ.ஆர். பணிக்கான காலக்கெடு ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக் கொண்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

வரும் நாட்களில் அமைச்சர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்டு 3-ந்தேதி வரை கட்சி நிர்வாகிகள் யாரும் ஐதராபாத்தில் உள்ள காந்தி பவனுக்கு வர வேண்டாம் என்றும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கி களப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.

கட்சி பதவிகள் மற்றும் வாரிய தலைவர் பதவிகளை எதிர்பார்த்து காந்தி பவனைச் சுற்றி வருபவர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்தார்.

பொறுப்புகளை சரியாக நிறைவேற்றாத நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தெலங்கானாவில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளிலும் இதுவரை காங்கிரஸ் சார்பில் 489 எஸ்.ஐ.ஆர்.

ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். பின்தங்கிய தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) வழங்கும் அறிக்கைகளை மட்டும் நம்பாமல், கட்சி சார்பில் செயல்படும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.ஏ.) அளிக்கும் தகவல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் சிறப்பாக செயல்படும் 100 பி.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கும் வாய்ப்பும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA