Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 19 ஜூலை (ஹி.ச.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் தமிழ் தேசியமே எங்களின் கொள்கை. சாதியை வேரறுத்தால்தான் உண்மையான தமிழ் தேசியத்தை வெல்ல முடியும். சாதி பெருமையை பேசும் அரசியல் அல்ல, சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் அரசியல்தான் தேவை என்றார்.
மேலும், அம்பேத்கரை வணங்கிக் கொண்டே அவரது கொள்கைகளை காலி செய்யும் பணியை பாஜக செய்து வருகிறது.
அதை அம்பேத்கர், பெரியார், மார்க்சிய சிந்தனையின் பார்வையில் பார்த்தால்தான் புரியும். பாஜகவை நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம்; தனிநபர் வெறுப்பை பரப்புவதில்லை என்று தெரிவித்தார்.
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் வலுப்பெற மாநில சுயாட்சி மற்றும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருந்தால்தான் மத்திய அரசும் வலிமையாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் மேற்கு மாவட்டங்களில் இருந்து 2 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என்றும், விசிக தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல; மக்களின் உரிமை மற்றும் சமூக நீதிக்காக உருவான இயக்கம் என்றும் திருமாவளவன் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam