திருவாரூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திய வழக்கு - தலைமை காவலர் பணியிடை நீக்கம்
திருவாரூர், 19 ஜூலை (ஹி.ச.) திருவாரூர் நகரின் வாளவாய்க்கால் பகுதியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனையிட்டபோது, சுமார
மது


திருவாரூர், 19 ஜூலை (ஹி.ச.)

திருவாரூர் நகரின் வாளவாய்க்கால் பகுதியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனையிட்டபோது, சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட வெளிமாநில உயர்தர மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் பயணித்த நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த குமார், அருண்குமார் மற்றும் பரவக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காரைக்கால் மாவட்டம் வாஞ்சியூரில் இருந்து நெடுவாக்கோட்டைக்கு புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தலைமை காவலர் கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட எஸ்.பி. சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P