Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில், திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ். பாரதி,
த.வெ.க. மற்றும் அதன் தலைமை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
த.வெ.க.வை 'கட்சி தாவல் கட்சி' என்று பெயர் மாற்றலாம். பல்வேறு கட்சிகளில் இருந்து தாவி வந்தவர்களே அங்கு உள்ளனர் என்றார்.
மேலும், த.வெ.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. அதை நாங்கள் கவிழ்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆதவ் அர்ஜுனா ஒருவர் போதும். விஜய்க்கு ஏதேனும் அரசியல் ஆபத்து ஏற்பட்டால், அது ஆதவ் அர்ஜுனாவால்தான் ஏற்படும் என்றும் பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணத்தை சுட்டிக்காட்டிய அவர்,
பல கட்சிகளில் இருந்தவர் தற்போது த.வெ.க.வில் உள்ளார். அவர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் உள்ளன. அவை மீண்டும் விசாரணைக்கு வந்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் வைகோ குறித்தும் கருத்து தெரிவித்த ஆர்.எஸ். பாரதி,
அரசியலில் பாதை மாறினால் என்ன நடக்கும் என்பதற்கு வைகோ ஒரு எடுத்துக்காட்டு என்றார்.
பாஜக குறித்து பேசிய அவர்,
பாஜக அரசை கொள்கை ரீதியாக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் கட்சி திமுக மட்டுமே என்றார்.
மேலும், கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்டவை தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு தேர்தல் தோல்வியால் திமுக பலவீனமடையாது. பல சோதனைகளை கடந்து வந்த இயக்கம் திமுக என்று கூறினார்.
கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்பு பேசியதாக சர்ச்சையான முதுகு எலும்பை உடைப்போம் என்ற கருத்து குறித்தும் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்தார்.
அது உடல் ரீதியான மிரட்டல் அல்ல. திமுக முன்வைக்கும் அரசியல் விமர்சனங்கள் எதிர்க்கட்சியின் வாதங்களை உடைக்கும் என்பதையே அந்த வார்த்தை குறிக்கிறது.
அதனை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam