Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 19 ஜூலை (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உதகையில் இருந்து கோழிப்பண்ணை செல்லும் முக்கிய சாலையில், தாய் கரடி ஒன்று தனது குட்டியுடன் அடிக்கடி உலா வருகிறது.
சாலையை கடப்பதும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதுமாக இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கரடியின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பள்ளி செல்லும் குழந்தைகள், விவசாய பணிக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குட்டியுடன் இருப்பதால் தாய் கரடி அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும் என்பதால், ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் கரடியை பிடித்து, பாதுகாப்பான முறையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், அப்பகுதியில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தனியாகவோ அல்லது தேவையின்றி வெளியிலோ நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் நடமாடுவதைக் கண்டால், உடனடியாக அருகில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b