நாங்கள் துரோகிகள் இல்லை ,துரோகிகள் அதிமுகவில்தான் இருக்கிறார்கள் – மரகதம் குமரவேல் பரபரப்பு பேட்டி
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக நிர்வாகிகள் தங்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு கடும் பதிலடி அளித்தார். அவர் கூறியதாவது: நேற்று அதி
மரகதம் குமரவேல்


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக நிர்வாகிகள் தங்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு கடும் பதிலடி அளித்தார்.

அவர் கூறியதாவது:

நேற்று அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், இங்கிருந்து சிலர் துரோகம் செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றதாக பேசினர். ஆனால், நாங்கள் துரோகிகள் அல்ல. துரோகிகள் அதிமுகவில்தான் இருக்கிறார்கள்.

மதுராந்தகம் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, இரட்டை இலை சின்னம் தோற்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில அதிமுக நிர்வாகிகளே எனக்கு எதிராக செயல்பட்டனர். அந்தக் கருப்பு ஆடுகள் அதிமுகவில்தான் உள்ளனர். அவர்களை முதலில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுக்கு பதவி ஆசை காட்டியோ, பணம் கொடுத்தோ யாரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைக்கவில்லை. '50 கோடி வாங்கிவிட்டார், 100 கோடி வாங்கிவிட்டார்' என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். 100 கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்பது கூட எனக்கு தெரியாது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெண்கள் பாதுகாப்பு, ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார்.

அந்தக் கொள்கை எங்களுக்கு பிடித்ததால்தான் இந்தக் கட்சியில் இணைந்தோம். எனவே, எங்களை தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டாம், என்று மரகதம் குமரவேல் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam