10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல ரவுடி பெரிய மகேஷ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் - 'கொக்கி' வினோத் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரண்
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி பெரிய மகேஷ் கொலை வழக்கில், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான வினோத் என்ற ''கொக்கி'' வினோத், இன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடு
Hh


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி பெரிய மகேஷ் கொலை வழக்கில், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான வினோத் என்ற 'கொக்கி' வினோத், இன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெருங்களத்தூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கொக்கி வினோத் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சரணடைந்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி பெரிய மகேஷ் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலைக்கு பின்னணியில் ரவுடிக் கும்பல்களுக்கிடையேயான முன்விரோதம் மற்றும் ஆதிக்கப் போட்டி இருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையின்படி, தனது எதிரியான சிவக்குமாரை கொலை செய்ய பெரிய மகேஷ் திட்டமிட்டு, தினேஷ் என்பவரை கூலிப்படையாக நியமித்ததாக கூறப்படுகிறது. சிவக்குமார் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பெரிய மகேஷும் தினேஷும் அங்கு சென்றுள்ளனர்.

ஆனால், தினேஷ் தனது விசுவாசத்தை மாற்றி, பெரிய மகேஷின் திட்டத்தை சிவக்குமார் தரப்பினருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரிய மகேஷை காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்திற்கு வரவழைத்து, திட்டமிட்டு வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலைக்குப் பின்னர், பெரிய மகேஷின் உடலை சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கொக்கி வினோத் உள்ளிட்ட சில முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருந்து வந்தனர்.

பெரிய மகேஷ், பிரபல ரவுடியான திண்டுக்கல் பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து, சென்னை மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், வசூல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கொக்கி வினோத் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது, இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ